Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

விட்டாச்சு லீவு


கிருஹ ஷோபா – மே 2002 இதழில் வெளியானதுவந்து விட்டது விடுமுறைக் காலம்! கிட்டத் தட்ட பத்து மாதங்கள் பாடம், படிப்பு, டியூஷன், பரீட்சை... டென்ஷன்களிலிருந்து விடுதலை!

குழந்தைகளுக்கு மட்டுமா? நமக்கும்தான்! அப்பாடா! இரண்டு மாதம் கவலையில்லை என்று சந்தோஷப்படும் அதே நேரம், ‘ஐயோ, இரண்டு மாதம் இந்தக் குழந்தைகளை வீட்டில் அப்படி சமாளிப்பது?’ என்ற அடுத்த கவலை வந்து ஆக்ரமித்து விடும். இந்த விடுமுறைக்கு எந்த இட்த்திற்கு போகலாம்? அகமதாபாத் அக்கா வீட்டிற்கா. மும்பை மைத்துனர் வீட்டிற்மா என சிந்தனை சுழன்றடிக்க, வீட்டிற்கு வருகிறவர்களை ‘அட்ஜஸ்ட்’ செய்து அனுப்பி விட்டு ஒரு வழியாக நீங்களும் கிளம்பி விட்டீர்களா?

நாம் விருந்தினர்களாகப் போகும் இடத்தில் நாம் நடந்து கொள்ளும் விதம், நம்மை அவர்கள் மறுபடியும் அழைக்க ஆசைப்படும்படி இருக்க வேண்டும். அதற்கேற்றபடி நீங்களும், உங்கள் குழந்தைகளும் நடந்து கொள்ள சில டிப்ஸ்!

நீங்கள் செல்லும் முன் அவர்களின் சௌகரியத்தை தொலைபேசி மூலம் கேட்டு தெரிந்து கொள்ளவும். திடீரென்று போய் நின்று ஆச்சரியம் கொடுப்பதெல்லாம் இந்த நாட்களில் சரியில்லை. எதையும் முன் கூட்டியே திட்டமிடவும்.

உங்கள் சாப்பாட்டு முறை, படுக்கும் முறைகளை முன்பே அவர்களிடம் தெரிவிப்பது நல்லது. அவர்கள் அருமையாக நெய்யும், எண்ணெயுமாக சமையல் செய்த பின் ‘எனக்கு இரத்த அழுத்தம், நான் சாப்பிட மாட்டேன்’ என்றால் அவர்களுக்கு தர்ம சங்கடம் மட்டுமின்றி சாமான்கள் வீணாவதால் மனக்கஷ்டம் வேறு ஏற்படும்.

அந்த வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து, வீட்டு வேலைகளில் நீங்களும் பங்கெடுத்துச் செய்யுங்கள். வெளியிடங்களுக்குச் செல்லும்போது கண்டிப்பாக அவர்களையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் வீட்டிற்குச் செல்லும்போது வெறுங்கையுடன் செல்லாதீர்கள். நீங்கள் செய்யும் இனிப்பு வகைகள் விருந்துக்குச் செல்லும் வீட்டிலுள்ளவர்களுக்கும் பிடித்தமானது என்றால் அதை நீங்களே வீட்டில் செய்து எடுத்துச் செல்லவும். அதில் அவர்கள் அடையும் மகிழ்ச்சியே அலாதி!

குழந்தைகளை அமைதியாக, அடக்கமாக இருக்கும்படிச் சொல்லி அழைத்துச் செல்லுங்கள். சில குழந்தைகள் டி.வி., ரேடியோவை கண்டபடி மாற்றியும், சத்தமாக வைத்தும் கலாட்டா செய்வார்கள். உங்கள் துணிமணிகள், சாமான்களை அவ்வப்போது அடுக்கி அழகாக வைத்துக் கொள்ளுங்கள். கண்ட இடங்களில் குப்பைகளைப் போடாமலும், குளியலறை, கழிவறைகளை சுத்தமாகவும் உபயோகியுங்கள்.

சாப்பிடும்போது குழந்தைகளுக்குத் தேவையானவற்றை மட்டும் போட்டுச் சாப்பிடச் சொல்லுங்கள். குழந்தைகளின் சாப்பாட்டை முன்னதாகவே முடித்து விட்டு, பெரியவர்கள் சாப்பிடவும், பல குழந்தைகள் பெரியவர்களுக்குச் சரியாக எல்லா அயிட்டங்களையும் போட்டுக் கொண்டு, கடைசியில் சாப்பிடாமல் வீணடிப்பது, அவர்களுக்கு மன வருத்தத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். விலைவாசி அதிகமாக விற்கும் இந்த நாட்களில் எதையும் வீணடிப்பது சரியில்லை.

நீங்கள் விருந்து முடிந்து வீடு திரும்பியதும் அவர்களின் உபசாரத்திற்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதுங்கள். தொலை பேசி, மொபைல், ஈமெயில் என்று எத்தனையோ இருந்தாலும் கையால் எழுதும் கடிதத்திற்கு எப்பொழுதுமே மதிப்பு அதிகம்!

என்ன? உங்கள் சுற்றுலா இனிமையாக, அருமையாக முடிந்து விட்டதா? இனி எப்பொழுதும் அவர்கள் வீட்டில் உங்களுக்கு சிறப்பான வரவேற்புதான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக