Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

என் மகள் எழுதுகிறாள்


புரொபசர் ஜொள்ளு

அவள் விகடன் – ஏப்ரல் 13, 2001 இதழில் என் மகள் கிரிஜா எழுதியது




அது மும்பையின் மிகப் பெரிய கிராண்ட் மருத்துவக் கல்லூரி. ‘என்ன செய்யச் சொல்லுவார்களோ?’ என்று முகம் வெளிற, கால்கள் தள்ளாட, திகிலுடன் வகுப்பறைக்குச் சென்றேன். அனாடமி ஆசிரியர் எல்லா மாணவிகளிடமும் ஜொள் விட்டதோடு, என்னிடம் ‘ஆத்தி க்யா கண்டாலா?’ (கண்டாலாவுக்கு வருகிறாயா?) என்று கேட்டதும், அங்கு ‘டிசக்ஷன்’ செய்யவிருந்த பிணத்தைக் கண்டதைவிட நடுங்கி விட்டேன்! இரவு 8 மணிக்கு ஹாஸ்டலிலிருந்த எங்களை சீனியர்கள் கூப்பிட்டு அனுப்பினார்கள். 7, 8 பேராக கிளம்ப, வார்டன் கேட்க, நான் முந்திரிக் கொட்டை மாதிரி சீனியர் ரூமுக்குப் போவதாகச் சொல்லி விட்டேன். ‘நோ ராகிங்; அறைக்குத் திரும்புங்கள்’ என்று வார்டன் சொல்லிவிட, வந்து தூங்கி விட்டோம். சீனியர்கள்  நடந்ததை அறிந்து இரவு 2 மணிக்கு வந்து, என்னை அழைத்துச் சென்றார்கள். காது கூசும் கேள்விகளை கேட்டு ஒரு வழியாக்கி விட்டார்கள். ஆட்டம், பாட்டம் வேறு! ‘தோட்டத்திலுள்ள செடி, மரங்களை எண்ணிட்டு வா’ என துரத்த, நானும் கர்ம சிரத்தையாக எண்ணி வந்து சொல்ல, ‘சே! உனக்கு அறிவில்லை? மரம், செடியெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தால் எப்படி டாக்டராவது?’ என்று கேலி செய்ய, போதும் என்றாகிவிட்டது! அதே சீனியர்கள் இன்று என் சிறந்த நண்பர்கள்.

கோகுலம் மார்ச் – 1993ல் என் மகள் கிரிஜா எழுதிய விடுகதை




கூவிக் கூவி அழைப்பாள் குயிலல்ல
கையில் எடுத்தால் அடங்குவாள் சிசுவல்ல!

--- டெலிபோன்



என் மகள் கிரிஜா எழுதிய கவிதை




நாட்டின் அழகு வளமையில்
நட்பின் அழகு துன்பத்தில்
பாட்டின் அழகு பாக்களில்
பூவின் அழகு மணப்பதில்

மீனின் அழகு துள்ளலில்
மானின் அழகு கண்களில்
மனிதர் அழகு பண்பினில்
மாணவர் அழகு படிப்பினில்



ராகி குலோப்ஜாமூன்
தேவி 1994 இதழில் வெளியனது



தேவையானவை;

ராகி (கேழ்வரகு) மாவு – 2 கப்
கொப்பரை தேண்காய் (சீவியது) - ½ மூடி
பொ. கடலை – 50 கிராம்
சர்க்கரை – 2 கப்
ஏலம் – 3
மைதா – 100 கிராம்
உப்பு – 1 சிட்டிகை
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
எண்ணை (வேகவிட)

செய்முறை:

சர்க்கரையை அரை கப் நீரில் போட்டுப் பாகாக்கி அதில் ராகி மாவு, பொட்டுக் கடலை , தேங்காய், ஏலப்பொடி, உப்பு சேர்த்து சற்று இளகிய பதமாக உண்டாக்கி, அதில் ராகி உருண்டைகளை முக்கி எடுக்கவும். இதுவே ருசியான ராகி குலோப்ஜாமூன்.



நியூட்ரோ-க்ரீன்ஸ் பொடி சாதம்





மங்கையர் மலர் ஏபரல் 2000 இதழில் இம்மாத இல்லத்தரசி தலைப்பின் கீழ் வெளியானது. பொடி சாதம் என்ற தலைப்பில் என் மகள் பி.கிரிஜா எழுதி நான்காம் பரிசு பெற்ற சமையல் குறிப்பு.

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி கீரை             -      2 கப் (ஆய்ந்தது)
வெந்தயக் கீரை            -      1 கப் (ஆய்ந்தது)
வல்லாரைக் கீரை          -      1 கப் (ஆய்ந்தது)
கறிவேப்பிலை                    -      ½ கப் (ஆய்ந்தது)
வேப்பம்பூ                           -      8 டீஸ்பூன்
மிளகு                          -      1 டீஸ்பூன்
சீரகம்                          -      1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்           -      6
பெருங்காயம்                -      சிறு துண்டு
உளுத்தம் பருப்பு           -      4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு           -      2 டீஸ்பூன்
நல்லெண்ணெய்            -      4 டீஸ்பூன்
உப்பு                           -      தேவையான அளவு

அலங்கரிக்க:

காரட் துருவல், வெள்ளரித் துருவல், பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது), கடுகு, பச்சை மிளகாய், பொடியாய் நறுக்கிய கொத்து மல்லி தழை, எலுமிச்சை.

செய்முறை:

மணத்தக்காளிக் கீரை, வெந்தயக் கீரை, வல்லாரைக் கீரை, கறிவேப்பிலை ஆகியவற்றை அலம்பி துடைத்து, 4 நாட்களுக்கு நிழலில் நன்கு காய வைக்கவும்.

வேப்பம் பூவை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதே சூட்டில் காய்ந்த கீரைகளையும் மொறுமொறுப்பாகும் வரை பிரட்டவும். அதிலேயே மிளகு, சீரகத்தை சற்று சிவக்க வறுக்கவும்.

நல்லெண்ணெயில் பெருங்காயம் போட்டுப் பொரிந்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு சிவக்க வறுபட்டதும் எடுத்துவிட்டு, மிளகாய் வற்றலையும் வறுக்கவும். சற்று ஆற விடவும்.

மிக்ஸியில் பெருங்காயம், மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், உப்பு போட்டு நைஸாக ஆனது, அதிலேயே வறுத்த உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்து எடுத்து வைக்கவும்.

கீரைகள், கறிவேப்பிலை, வேப்பம்பூவை நைஸாக அரைத்துக் கொண்டு, இந்தப் பொடியுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இந்தப் பொடியை ஆறியதும் பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

தேவையான சாதத்தை 4 ஸ்பூன் நெய் சேர்த்து, நன்கு உதிர்க்கவும். தேவையான அளவு பொடியை சேர்த்துக் கலந்து பிசையவும்.

நல்லெண்ணெயில் கடுகு, பச்சை மிளாகாய் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கிப் போட்டு, துருவிய காரச், வெள்ளரி சேர்த்துக் கலந்து, மேலே பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை சேர்த்துப் பரிமாறவும். தேவையெனில் எலுமிச்சம் பழம் பழச்சாறு சேர்க்கலாம். நிலக்கடலை, முந்திரி வறுத்துச் சேர்க்கலாம். இதற்கு மோர்க் குழம்பு, தயிர் பச்சடி, பொரித்த வடாம் நல்ல மாட்ச்!

இந்த அலங்கரிப்பு பார்வைக்கும், அதிகப் படியாக ருசிக்குமே! இது இல்லாமலும் சாதத்தில் அப்படியே பொடியைச் சேர்த்துப் பிசைந்தும் சாப்பிடலாம். இதில் வெந்தயக் கீரை அல்லது வல்லாரை கிடைக்காவிடினும் மற்றவைகளை சேர்த்து செய்யலாம். மணத்தக்காளி கீரை மிக அவசியம். சிறு குழந்தை முதல் முதியோர் வரை அஜீரணம், வாயு, வாய்ப்புண், வயிற்றுப் புண் இவற்றிற்கு வாரம் ஒரு முறை இந்தப் பொடியை உணவில் சேர்த்துச் சாப்பிடலாம். இயற்கையான சத்து நிறைந்த இப்பொடி ருசியிலும் குறைந்ததல்ல! உப்பு காரத்தை அவரவர் தேவைகேற்ப சேர்த்துக் கொள்ளவும்.




மேத்தி லட்டு

மங்கையர் மலர் நவம்பர், 2003 இதழில் இம்மாத இல்லத்தரசி பகுதியில் எழுதி ஆறுதல் பரிசு பெற்ற சமையல் குறிப்பு.



தேவையான பொருட்கள்:

வெந்தயம்                    -      200 கிராம்
கொப்பரை            -      ½ கிலோ
ரவா                     -      ½ கிலோ
காய்ந்த பேரீச்சை  -      ½ கிலோ
வெல்லம்               -      1¼ கிலோ
வெள்ளை எள்        -      50 கிராம்
கசகசா                  -      50 கிராம்
பாதாம், முந்திரி     -      25 கிராம்
நெய்                           -      6 டீஸ்பூன்
திராட்சை                     -      25 கிராம்
ஏலப்பொடி

செய்முறை:

வெந்தயத்தை பச்சை வாசனை போக, தீயாமல் சிவக்க வறுக்கவும். ரவையையும் லேசாக வறுக்கவும். கசகசா, எள்ளைப் பொன்னிறமாக வறுத்து, எல்லாவற்றையும் தனித்தனியாக மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பாதாம், முந்திரியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒன்றிரண்டாக உடைக்கவும். கொப்பரையை மெலிதாகத் துருவி வெறும் வாணலியில் சற்று வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, ஏலப்பொடி, திராட்சை சேர்த்துக் கலக்கவும்.

வெல்லத்தில் சிறிதும் நீர் சேர்க்காமல் அடி கனமான பாத்திரத்தில் போட்டு கம்பிப் பாகு ஆக்கவும். நீரில் போட்டால் தொய்யாமல் உருட்ட வர வேண்டும். அதில் நெய்யை விட்டு, கலந்து வைத்துள்ள மாவைப் போட்டு நம்கு கலக்கவும். உருண்டைகளாகப் பிடிக்கவும்.

இத்துடன் பச்சைப் பயிறு, நிலக்கடலை, கொள்ளு இவற்றையும் வறுத்துப் பொடியாக்கிச் சேர்க்கலாம். அந்த அளவிற்கு வெல்லம் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.


சற்று கசப்பாக இருந்தாலும், இந்த சத்தான ‘மேத்தி லட்டு’ மகாராஷ்டிரா ஸ்பெஷல். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. பிரசவம் ஆன பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை சுத்தமாகும். பால் சுரக்கும். உடலுக்கு வலு கிடைக்கும்.

டாக்டர் கிரிஜா.பி. நாவி மும்பை


என் மகள் பிறந்த தேதி பற்றி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக