Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

எமனைத் துரத்திய தட்சிணாமூர்த்தி

ஞான ஆலயம் மார்ச் 2003 இதழில் வெளியானது



சிவபெருமானுக்குகந்த முதலாவதும், முக்கியமானதும் ஆகிய நாள் மகா சிவராத்திரி. மாசி மாதத்தின் அமாவாசை நாளான்று கொண்டாடப்படும் சிவராத்திரி விரதம் இந்தியாவின் அனைத்து மாநில மக்களாலும் பக்தியுடன் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவபெருமானின் பிரதான வடிவமான சிவலிங்கத்திற்கு இரவு முழுவதும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும் நாளாகும்.

சிவராத்திரி கொண்டாடப்படுவதற்கு பல கதைகள் கூறப்படுகின்றன. ஒருமுறை பிரம்மா, விஷ்ணுவுக்கிடையில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. இருவரும் சிவ பெருமாணிடம் சென்று முறையிட்டு நியாயம் கேட்டனர். சிவபெருமான் தான் ஜோதி வடிவம் கொள்வதாகவும், தனது அடியையும், முடியையும் யார் முதலில் கண்டு பிடிக்கிறாரோ, அவரே பெரியவராகக் கருதப்படுவர் என்றும் கூறினார்.

விஷ்ணு வராக உருவமெடுத்து கீழ்ப்பகுதிக்குப் பாதத்தைக் கண்டு பிடிக்கச் சென்றார். வெகு தூரம் தேடியும் கிடைக்காமல் சிவனிடம் வந்து தோல்வியை ஒப்புக் கொண்டார். நான்முகனோ முடியை தேடிச் செல்லும் வழியில், வந்து கொண்டிருந்த தாழம்பூவுடன் சிவ பெருமானிடம் சென்று, தான் முடியைக் கண்டு தாழம்பூவை எடுத்து வந்த்தாகப் பொய் சொன்னார். கோபம் கொண்ட சிவபெருமான் பிரம்மாவுக்குக் கோயில் வழிபாடு கிடையாது என்றூம், தாழம்பூ சிவபூஜைக்கு உதவாதென்றும் சாபம் கொடுத்தார். சிவபெருமான் ஜோதி வடிவ லிங்கமாக நின்ற அந்த நாளே சிவராத்திரியாகக் கொண்டாடப்படுவதாக சிவபுராணம் கூறுகிறது.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த சமயம் விஷம் வெளிப்பட, சிவபெருமான் அந்த விஷத்தைத் தானே அருந்தினார். பயந்து போன உமையம்மை பெருமானின் தொண்டையைப் பிடிக்க, விஷம் உள்ளே இறங்காமல் தொண்டையிலேயே நிற்க ‘நீலகண்டன்’ எனப் பெயர் பெற்றார். இவ்வாறு உலகையும், உலக மக்களையும், தேவாசுரர்களையும் காப்பாற்ற சிவன் விஷமுண்ட நாளே சிவராத்திரி என்றும் ஒரு புராணாக் கதை உண்டு.

சைவர்களின் மிக முக்கிய விரதம் சிவராத்திரி. படைத்தல், காத்தல், அழித்தலில் ஈஸ்வரன் அழிக்கும் கடவுள். அதனாலேயே குளிர் காலத்தின் கடைசி நாளன்று சிவராத்திரி வருகிறது. அதனாலேயே வழக்கில், ‘சிவராத்திரியோடு பனி ‘சிவசிவ’ன்னு போய்விடும்’ என்பார்கள். மறு நாள் முதல் வசந்த காலம் ஆரம்பித்து காய்ந்த மரங்கள் இலையும், பூவுமாக புத்துயிர் பெறும்.

லிங்கம் என்பதற்கு குறி என்பது பொருள். லிங்கமும் ஆவுடையும் ஆண், பெண் ஐக்கியத்தைக் குறிப்பன. பிரளய காலத்தில் அத்தனை உயிரும் அழிந்தபோது, வேதங்கள், புராணாங்கள், படைப்புத் திறன், மற்றும் அனைத்து தேவர்களும் லிங்கத்தில் அடக்கமாயினர். மீண்டும் ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் போது லிங்கத்தின் உள்ளிருந்து அத்தனையும் வெளிப்பட்டதாக ஸ்கந்த புராணம் உரைக்கிறது.

அசுரர்கள் அடிக்கடி தேவர்களைக் கொடுமைப்படுத்த, மனம் நொந்த தேவர்கள் ஈசனை நாடி, தாம் ஒவ்வொரு முறையும் தோற்பதன் காரணம் கேட்டனர். ஈசன், அரக்கர்கள் தம் லிங்க வடிவைப் பூசிப்பதாலேயே பலம் பெறுகிறார்கள் என்றும், தேவர்கள் வணங்காதலால் தோல்வி ஏற்படுவதாகவும் கூறினார். அதன் பின்பே தேவர்களும் சிவலிங்க வழிபாட்டை ஆரம்பித்தார்களாம்.

சிவலிங்கம் பிரம்மா, விஷ்ணு, ஈசன் என்ற முத்தேவரின் ஐக்கியம். லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்மா. இடைப்பகுதி விஷ்ணுவின் அம்சம். மேல்பகுதி சிவபெருமானுக்குரியது.

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். சிவராத்திரி அன்று இரவு முழுவதும் அபிஷேகம் நடைபெறுவது இதை உணர்த்துகிறது. கங்கையைத் தன் தலையிலேயே கொண்ட சிவ பெருமானுக்கு நான்கு கால அபிஷேகம் பொருத்தமானதே.

சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை விசேஷமானது. வில்வ இலை மருத்துவ குணம் கொண்டது. இருதயம் மற்றும் சுவாசக் கோளாறுகளைப் போக்கவல்லது. சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சிப்பது ஜீவாத்மாவாகிய மனிதன், பரமாத்மாவாகிய இறைவனுடன் இணைவதைக் குறிக்கும். ஆலயம் மனித உடலெனில் அதிலுள்ள ஈசன் பரமாத்மா. இரவு அஞ்ஞானத்தைக் குறிக்கும். சிவராத்திரி அன்று இரவு ஆலயத்தில் தங்கி, இறைவனின் அபிஷேக ஆராதனைகள தரிசித்து, ‘ஓம் நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்தால், நாம் ஈசனாகிய பரமாத்மாவுடன் ஐக்கியமாகி ஞானம் பெறலாம்.

இரவு முழுவதும் விழித்திருந்து ஈசனை வணங்குவதன் பலனை நமக்கு விளக்குவது ஒரு வேடன் கதை. ஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாடிக் கொண்டே அடர்ந்த காட்டினுள் சென்றுவிட்டான். இரவு வந்துவிட, வழி தவறி விட்டது. ஒரு புலி அவனைத் துரத்த, பயந்த வேடன் மரத்திலேறி, விழித்திருக்க வேண்டி, ஒவ்வொரு இலையாகப் பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான். அன்று சிவராத்திரி நாள். மரத்தின் கீழே லிங்க வடிவிலிருப்பது ஈசன் என்று தெரியாமலேயே, வேடன் வில்வ இலைகளால் அர்ச்சித்ததால் அவன் மோட்சம் பெற்றான்.

திருக்கோகர்ணம், திருக்காளாத்தி, ஸ்ரீசைலம். திருவைகாவூர் இவை மஹாசிவராத்ரி தலங்களாகப் போற்றப்படுபவை. தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்காவில் உள்ள திருவைகாவூர் ஸ்ரீவில்வாரண்யேசுவரர் ஆலயத்தில் சிவராத்திரி மிக முக்கியமான பெருவிழா. இத்தலபுராணத்தில் சிவராத்திரி விரத மகிமையைக் கூறும் வேடன் கதை சற்று மாறுபட்டுள்ளது. இத்தலத்தில் தவம் செய்து, ஈசனை வழிபட்ட தவநிதி என்ற முனிவரை வேடன் ஒருவன் தாக்க முயல, சிவபெருமான் புலி வடிவில் அவனைத் துரத்தினார். புலிக்குப் பயந்து மரத்தில் ஏறிய வேடன் இரவு முழுவதும் வில்வ இலைகளைப் பறித்துப் போட, அவை புலியாகிய ஈசன் மேல் விழுந்தது. மறுநாள் காலை அவனது ஆயிள் முடிவதால், எமன் அவனது உயிரைக் கவர வந்தான். இரவு முழுவதும் தன்னைப் பூஜித்த புண்ணியவானான வேடனைக் காக்க இறைவன், தட்சிணாமூர்த்தி வடிவில் கோல் கொண்டு எமனைத் துரத்தியதால், இங்குள்ள தட்சிணாமூர்த்தி எங்குமில்லாத வடிவில் கோலுடன் காணப்படுகிறார்.

எமனைக் கண்டு கொள்ளாத நந்தி தேவரை சிவன் கோபிக்க, ஓடிய எமனை நந்தி தேவர் திரும்பி தன் மூச்சுக் காற்றினால் இழுத்து நிறுத்தி விட்டார். பின் எமனின் வேண்டுகோளுக்கிணங்கி, சிவபெருமான் உத்தரவிட எமனை விடுவித்தார். இதனால் இவ்வூரில் நந்திதேவர் வாசலை நோக்கியுள்ளார்.

மஹாசிவராத்திரி விரத வழிபாட்டால் மனிதன் ஆறுவகை புண்ணியங்களைப் பெறுவதாக சிவ புராணம் கூறுகிறது. அக்னி ஸ்வரூபமான சிவபெருமானை குளிர்ச்சியான வில்வ இலைகளால் அர்ச்சிப்பது தூய ஆன்மாவைப் பெற உதவும். சந்தனக் காப்பு நற்குணங்களைப் பெற்றுத் தரும். நைவேத்தியம் நீண்ட ஆயுளையும், நினைத்த காரியம் ஈடேறவும் அருள் புரியும். ஊதுபத்தி, கற்பூரம் ஏற்றுவது செல்வம் தரும். விளக்கு ஏற்றுவதால் ஞானம் கிட்டும். தாம்பூலம் சமர்ப்பிப்பது உலக ஆசைகளிலிருந்து விடுபட வைக்கும்.


பார்வதி தேவி, தன் நாயகன் ஈசனுக்கு எந்தத் துன்பமும் வரக்கூடாது என வேண்டி, சிவராத்திரி விரதம் இருந்த்தாக புராணம் கூறூகிறது. பெண்கள் இந்த விரதம் இருந்தால் நல்ல கணவரையும், குழந்தைகளையும் பெறலாம். திருமணமான பெண்கள் தம் கணவரின் நலன் வேண்டி இவ்விரதம் அனுஷ்டித்தல் நலம். வேண்டியவருக்கு, வேண்டியன அருளும் சிவராத்திரி விரதம் இருந்து நற்பலங்களைப் பெறுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக