Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

பூச்சித் தொல்லைக்கு 'குட்பை'


ஞான ஆலயம் ‘சினேகிதி’ ஜூன் 2002 இதழில் வெளியானது.




எவ்வளவு நாகரீகமான, புதிய மாடல் வீடுகளாக இருந்தாலும், கொசு, ஈ, கர்ப்பான் பூச்சி இவற்றிடமிருந்து நாம் தப்பிக்க முடியாது. பூச்சிகளை ‘பூ’ என்று விரட்ட, சில ‘டிப்ஸ்...’

கொசுக்களுக்கு, கொசுவர்த்திச் சுருள்களையும், மேட்டுகளையும் உபயோகிக்கும்போது, அதிலிருந்து வரும் புகை மற்றும் மணம் பலருக்கு அலர்ஜியாக இருக்கும். அதற்கான இயற்கை வழி இதோ...

ஒரு சிறிய மண் பாத்திரத்தில் தேங்காய் நாரைப் போட்டு எரிய விட்டு அதில் சில வேப்பிலைகளைப் போட்டால், அந்த மணம் கொசுக்களை அண்ட விடாது.

இன்னொருமுறை: ஏதாவதொரு வாசனை சோப்பை நீரில் கரைத்து, அக்கலவையுடன் சிறிதளவு மண்ணெண்ணெய் சேர்க்கவும். இதனை கட்டில், மேசை, நாற்காலி இவற்றின் கீழும், கொசுக்கள் அடையும் மூலைகளிலும் தெளித்தால் கொசுத் தொல்லை இருக்காது.

கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே, மாம்பழம், பலாப் பழங்களின் சீஸன். அதோடு ஈக்களின் சீஸனும் கூட! ஈக்கள் வராமலிருக்க ஒரு கொத்து புதினா இலைகளை சமயலறை ஜன்னலுக்கருகில் தொங்க விடுவதோடு, சில இலைகளை நன்கு கசக்கி சமயலறையில் ஆங்காங்கு போட்டு வைக்கவும். புதினா மணம் ஈக்களின் எதிரி!

வேப்பிலையை அரைத்து உப்பு நீரில் கரைத்துத் தெளித்தால் ஈக்கள் பறந்தோடும்.

ஒரு இரும்பு பாத்திரத்தை நன்கு சூடாக்கி அதில் 4, 5 கற்பூர வில்லைகளைப் போட்டால், அந்த வாசனைக்கு ஈக்கள் அண்டாது.

மழைக் காலங்களில், கரையாங்களின் தொல்லையால் மரச் சாமான்கள் அரிக்க வாய்ப்புண்டு. அவ்ற்றிற்கு கற்பூர வில்லைகளைப் பொடி செய்து அத்துடன் லிக்விட் பாரஃபின் கலந்து மரச் சாமான்களைத் துடைப்பதோடு, இடுக்குகளிலும் விடவும்.

எறும்புகளின் படையெடுப்பிலிருந்து தப்ப, அவை குடி கொண்டிருக்கும் சுவர், ஜன்னல்களின் பிளவுகளில் போரிக் பவுடர் அல்லது காரப் பொடியைப் போடவும்.

கரப்பான் பூச்சிகள்... ஆ! அது இல்லாத வீடு உண்டா! சமயலறை அலமாரிகள், கப்போர்டுகளில் சில வெற்றிலைகளைக் கிள்ளிப் போட்டு வைக்கலாம்.

1 கப் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் போரிக் பவுடர், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காய வைத்து சமயலறை இடுக்குகள், அலமாரி ஓரங்கள், பாத்திரம் கழுவும் தொட்டிகளில் போட்டு வைக்கவும்.

இதே கலவையை சற்று இளகிய பதத்தில், டைனிங் டேபிளின் கீழே, அலமாரிகளில் தடவிக் காய விடவும். பின் அலமாரிகளில் பேப்பர் போட்டு சாமான்களை அடுக்கவும். கரப்பான் வராது.

வேப்பிலை, ரோஜா இதழ், மல்லிகைப் பூக்கள், வசம்பு, மருதாணிப் பூ இவற்றை வெயிலில் காய வைத்து நைஸாக அரைத்து மெல்லிய துணியில் மூட்டையாகக் கட்டி, பீரோ தட்டுகளில், துணிமணிகள் வைக்கும் அலமாரிகளில் போட்டு வைத்தால் பூச்சி வராது. வாசனையாக இருக்கும்.


கம்பளித் துணிகளை பூச்சிகள் அரிக்காமலிருக்க, அவற்றின் இடையே சில கிராம்புகளைப் போட்டு வைக்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக