Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

குழந்தைகளை அடிக்கலாமா கூடாதா?

மங்கையர் மலர் செப்டம்பர் 1998 இதழில் வெளியானது




எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் தன் குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை என்பதற்காக கண்மண் தெரியாமல் அடிக்கும் வழக்கமுடையவர். நான் ஒருமுறை அவர் வீடு சென்ற போது குழந்தைகள் முகம் வீங்கிப் பார்க்க சகிக்கவில்லை. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு அவர் தன் குழந்தைகளைப் பேசும் வார்த்தைகள் காதால் கேட்க முடியாது. ‘இப்படிப் படிக்காத குழந்தைகள் இருந்தாலென்ன, போனாலென்ன?’ என்று வாய் கூசாமல் பேசுவார். அதற்கேற்றாற் போல், அவரது மகன் அகால மரணமடைந்தபோது, அவர் கதறிய கதறல், அவன் உயிரோடிருந்தபோது ஒரு நாளாவது அந்தக் குழந்தையை அன்பாக, ஆதரவாக பேசியிருப்பாரா என்று எனக்குத் தோன்றியது.

மற்றொரு சிநேகிதி ஒருத்தி தன் மகனை மிக கண்டிப்போடு வளர்ப்பவள். +2 படிக்கும்வரை கூட தான் அருகில் அமர்ந்து படிப்பு, படிப்பு என்று உயிரை எடுப்பார். சரியாக மனப்பாடம் செய்து அவளிடம் ஒப்பிக்காவிட்டால், அடி, உதை, குட்டுதான். யார் எதிரில் இருந்தாலும் கவலையே படமாட்டார். அந்தப் பையனோ கண்ணீரை மறைக்க முடியாமல் கூனிக்குறுகிப் போவான். அவன் நண்பர்களுடன் பேசும் போது கூட எதிரிலியே நின்று, ‘போதும் பேச்சு, படிக்கலாம்’ என்று அதட்டுவார். அந்தப் பையன் இன்னமும் அம்மா சொல்வதைத்தான், அம்மா சொன்னால் தான் எதையும் செய்வான். சுய புத்தியே இல்லாமல் இருக்கிறான். ‘ஐயோ பாவம், அடிக்காதே. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக விடு’ என்றால், ‘பேசாமல் போ. அவன் என் பிள்ளை. இதில் தலையிடாதே’ என்பாள். ஏன், அவனுக்குப் பரிந்து பேசும் அவள் கணவரைக் கூட எல்லார் எதிரிலும் எடுத்தெரிந்து பேசி விடுவாள். இந்த மகன் இன்று இவள் ஆணைக்குக் கட்டுப்பட்டு அம்மாவை நிமிடத்தில் தூக்கி எறிய மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

என் அடுத்த வீட்டுப் பெண்மணி ஒருவர் தன் மகளை ஹோம் ஒர்க் செய்யவில்லை என்று இருட்டு அறையில் கதறக் கதற அடைத்து விடுவார். அதைப் பார்க்கும்போது என் மனமே கதறும். ஆனால் அவளிடம் யார் சொல்வது? பெற்றவளாயிற்றே? அந்தக் குழந்தையும் என்ன கேட்டாலும் அம்மா முகத்தைப் பார்த்துதான் பதிலே சொல்லும். இதில் அவளுக்கு ஒரு அற்ப சந்தோஷம், தற்காலத்தில் பெரியோர் கண்டிப்பிற்கு பயந்துதானே பல +2, பத்தாம் வகுப்பு குழந்தைகள் கூட தேர்வில் தவறி விட்டால், உடனே யோசிக்காமல் தற்கொலை செய்து கொண்டுவிடும் செயல் இன்று மிக அதிகமாக இருக்கிறது. இதற்கு முதல் காரணம் கண்டிப்பாக பெற்றோர்களின் அடக்குமுறையும், அளவுக்கு மீறீய கண்டிப்பும்தான்.

சரி, குழந்தைகளை அடிக்காமல் வளர்க்க முடியுமா? கண்டிப்பாக முடியும். என் நான்கு குழந்தைகளையும் நான் அப்படித்தான் வளர்த்தேன். என் குழந்தைகளை நானோ, என் கணவரோ இன்று வரை அடித்ததில்லை. சிறு வயதில் படிக்கவும், எழுதவும் அவர்களும் அடம் செய்த்துண்டு. ‘சரி, கொஞ்ச நேரம் விளையாடி விட்டு வந்து படி’ என்று விட்டுப் பிடித்தால் எந்தக் குழந்தைதான் புரிந்து கொள்ளாது? சிறு வயது முதலே நல்ல பழக்கங்களை ஏற்படுத்தித் தருவது நம் கடமைதானே? நாம் வாழும் முறைதான் அவர்களுக்குப் பாடமாகிறது. என் குழந்தைகளை அவர்கள் விருப்பத்தோடு என் விருப்பத்தையும் சேர்த்து உருவாக்கினேன் என்றுதான் சொல்வேன்.

அவர்கள் விரும்பிய எதையும் கூடியவரை வாங்கித் தர நாங்கள் மறுத்ததில்லை. நான்கு வயது முதலே திருப்பாவை, ஸஹஸ்ர நாமம், ஆத்திச் சூடி என்று மனனம் செய்து போட்டிகளில் பங்கு பெறப் பழக்கினேன். பள்ளி, கல்லூரிகளில் எந்தப் போட்டியானாலும் இவர்கள் பங்கு பெறத் தவறியதில்லை. பெரும்பாலும் பரிசும் பெறுவார்கள். எட்டாம் வகுப்பிலேயே ஹிந்தி பிரவீண் முடித்து விட்டார்கள். வகுப்பில் முதலிடம்தான் பெற வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தியதில்லை. ஆனால் முதலிடம் பெற்றால்தான் சிறந்த மேல் படிப்பு, வேலை வாய்ப்பு கிடைக்குமென்பதை அவ்வப்போது வலியுறுத்தியதன் பலன் என் முதல் மகன் தமிழகத்தில் ஐந்தாமிடமும், இரண்டாம் மகன் மாநில முதலிடமும் பெற்று என்னை ஈன்ற பொழுதின் பெரிதுவக்கச் செய்தனர். என் மகள் +2வில் சிறந்த மதிப்பெண் பெற்று மருத்துவம் பயிலவிருக்கிறாள். ஆனால், என்னுடைய ஒரே குறை, இந்தக் குழந்தைகள் யாருக்கும் விளையாட்டில் ஆர்வமில்லாததுதான்.


எல்லா விரலும் ஒன்று போலிருக்குமா? என் கடைசி மகன் பத்தாம் வகுப்பு. அவனுக்கோ விளையாட்டிலிருக்கும் ஆர்வம் படிப்பிலில்லை. ஆரம்பம் முதலே ஆவரேஜ்தான். சின்ன வயதில், ‘என்ன இருபதாம் ரேங்க் வாங்கியிருக்கிறாயே’ என்றல், ‘என்னம்மா ஒன்றைவிட 20 தானே பெரிசு? நான்தான் பெரிய ரேங்க்’ என்று அழகு மழலையில் அவன் சொல்லும்போது அடிக்கவா தோன்றும். அவனுக்குப் படித்து மனனம் செய்து பரீட்சை எழுதுவது பிடிக்காத விஷயம். கம்ப்யூட்டர் அவனுக்கு அல்வா என்றால், சரித்திரமும், பூகோளமும் எட்டிக்காய். ‘ஆனால் பத்தாம் வகுப்பு வரை இதெல்லாம் கண்டிப்பாக படித்துத்தான் ஆக வேண்டும். அப்பொழுதுதான் அதிக மதிபெண் பெற்று என்ஜினியர் ஆகலாம். இந்த வருடம் மட்டும்தானே, கொஞ்சம் கஷ்டப்பட்டு படி’ என்று அன்பாக, கோபிக்காமல், புரியும்படி எடுத்துச் சொன்னதன் பலன், இன்று 75% மதிப்பெண் பெறுமளவு தேறியிருக்கிறான். நாம் நம்பிக்கையுடன் பேசினால்தான் குழந்தைகளுக்கும் சந்தோஷமாக இருக்கும். நாமே நம் குழந்தைகளை ‘நீ எதற்கும் லாயக்கில்லை. மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்று சொன்னால், அந்தக் குழந்தை மனம் குன்றிப் போகுமே? இப்பொழுது பல பள்ளிகளிலும் தாழ்வு மனப்பான்மைக்கு இடமில்லாத ‘கிரேட்’ முறை கடைப்பிடிக்கப்படுவது நல்ல முறை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக