ஹரியானாவில்,
கீதோபதேசமும், பாரதப் போரும் நடந்த குருக்ஷேத்திரத்தில் ஜான்சா ரோடு என்ற இடத்தில்
உள்ளது தேவிகூப் ஆலயம் என்னும் சதி சாவித்ரி பத்ரகாளி அன்னையின் அழகான ஆலயம்.
மதியாதார் வாசல் மிதியாதே என்று
ஈசன் தடுத்தும், பிறந்த வீடுதானே என்று அங்கு சென்ற ஈஸ்வரி, அங்கு நிகழ்ந்த அவமானத்தால்
உயிரை மாய்த்துக் கொண்டாள். அதை அறீந்த பரமன், மனம் பேதலித்து, பார்வதியின் உடலைச்
சுமந்தபடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.
அதைப் பார்த்து மனம் நொந்த மகாவிஷ்ணு,
அன்னையின் உடலை தன் சக்ராயுதத்தால் சிதைத்த போது, அவளது உடல் பாகங்கள் விழுந்த
இடங்கள் சக்தி பீடங்களாகப் போற்றப் படுகின்றன.
அவற்றுள் ஹரியான, பஞ்சாப், ஹிமாசல
பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் அமைந்துள்ள ‘நவ சக்தி பீடங்கள்’ மிக
விசேஷமானவை. அப்பகுதியில் வசிக்கும் பக்தர்கள் இந்த நவசக்தி பீடங்களுக்கும்
யாத்திரை செய்து தரிசிப்பதை வாழ்வின் மிக முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.
நவசக்தி பீடங்களுள் இன்றாக
ஹரியானாவில் குருக்ஷேத்திரத்தில் அமைந்துள்ள சக்திபீடம், சக்தியின் வலது முழங்கால்
விழுந்த இடம் எனப்படுகிறது. இங்குள்ள ‘தேவிகூப்’ எனும் பத்ரகாளி ஆலயம்.
இந்த இடம் சாவித்ரி பீடம், தேவி
பீடம், காளிகா பீடம், ஆதி பீடம், சித்தி பீடம் என்று பல பெயர்களால் அழைக்கப்
படுகிறது. மகாவிஷ்ணுவால் சிதைக்கப் பட்ட தேவியின் வலது முழங்கால் விழுந்த கிணறு
இங்கும் இன்று காணப்படுகிறது.
மிகவும் பழமையான, அதி அற்புத சக்தி
வாய்ந்த ஆலயம் இது. மகாபாரத காலத்துக்கும் முற்பட்ட தலம் என்பதை அறியும்போது மெய்
சிலிர்க்கிறது.
அன்னை பத்ரகாளி, விரிந்த கண்களும்,
வெளியில் தொங்கும் நாக்குமாக காட்சியளிக்கிறாள் என்றாலும், தேவியின் கண்களில்
தெரியும் கருணையும், வரமுத்திரை காட்டி சாந்தப்படுத்தும் அவளது திருக் கரங்களும்
நம்மை நெகிழச் செய்கின்றன. பயம் ஏற்படுத்தாது, பக்தியை ஏற்படுத்தி நம்மை சன்னதியை
விட்டு நகர விடாமல் செய்கிறது. காலியன்னையின் அன்பு தவழும் அழகிய தோற்றம்,
சன்னதிக்கு முன்புறம் அன்னையின் முழங்கால் விழுந்த இடத்தில் அமைந்துள்ளது. கிணறு ஒன்று.
அதன் தூய்மையைப் பராமரிப்பதற்காக, கிணற்றை கம்பி போட்டு மூடியுள்ளனர். அதன் மீது
அன்னையின் முழங்கால், பாதத்தை தாமரை மீது அமைந்துள்ள டிவில் பளிங்கினால் செய்து
வைத்திருக்கிறார்கள்.
அன்னையின் ஆலயத்தில் எங்களுக்கும்
இடம் உண்டு என்று சொல்லும் விதமாக, ஹனுமான், பிள்ளையார், பரவர் ஆகியோரும் அமைந்து
அருளாட்சி செய்கிறார்கள்.
சன்னதியின் இடப்பக்கம் சில படிகள்
ஏறிச் சென்றால், மேலே ஈசனின் சன்னதி அமைந்துள்ளது. இச்சன்னதியில் காணப்படும் பரமனின்
அருவுருவம், அற்புதமான அமைப்பில் லலாட திலகமும், சர்ப்பமும் கொண்ட சிவலிங்க
உருவில் விளங்குகிறது. அருகில், மாதா வைஷ்ணவி தேவியின் சன்னதி, தெய்வீக அருளுடன்
காட்சி அளிக்கிறது.
மகாபாரதப் போர் நடந்த யுத்த
பூமிக்கு காவலாக நின்றவளாம் இங்கு காட்சி தரும் காளி மகாதேவி. பாரதப் போருக்கும்,
இந்த தேவிக்கும் நிறைய தொடர்பு உண்டு என்று கூறப்படுகிறது. போருக்குப் புறப்படும்
முன், அர்ச்சுனன் இந்த தேவியை வணங்கி வேண்டிச் சென்றானாம். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா,
போரில் தர்மத்திற்கு வெற்றி கிட்ட வேண்டும் என்று இந்த அன்னையிடம் வேண்டிக்
கொண்டு, போரில் வெற்றி பெற்ற பின், தங்கக் குதிரையைக் காணிக்கையாகக் கொடுத்தாராம்.
இந்த வழக்கத்தைப் பின்பற்றி இன்றும் வேண்டியது நிறைவேறிய பின் மண்ணாலான குதிரை
பொம்மைகளைக் காணிக்கையாக வைக்கும் வழக்கம் தொடர்கிறது.
தேவியின் பாதம் விழுந்த கிணற்றைச்
சுற்றிலும் காணப்படும் மண் குதிரைகளின் எண்ணிக்கை, பக்தர்களின் வேண்டுகோளை அன்னை
உடனுக்குடன் நிறைவேற்றுவதை உணர்த்துகிறது.
பாகவத மகாபுராணம், கண்ணனுக்கும்,
பலராமனுக்கும் இத்தலத்தில் தான் முடி இறக்கும் வைபவம் நிகழ்ந்தது எனத்
தெரிவிக்கிறது.
தூய மனதுடனும், உறுதியான
நம்பிக்கையுடனும் வேண்டுவோரின் மனக் குறையைத் தீர்த்து, வேண்டியதை நிறைவேற்றி
வைக்கும் அன்னை பத்ரகாளி, தன் காலைப் பிடித்தவரின் கவலைகளை விரட்டி, காத்து, சாந்த
ஸ்வரூபியாக காலம் காலமாக அருளாட்சி செய்கிறார்கள்.
நவராத்திரி விழா இங்கு மிக
விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக