எங்க ஊர்
பிள்ளையார் என்ற தலைப்பின் கீழ் - கல்கி 19.12.2004 இதழில் வெளியானது.
மும்பையில் மிக வரப்ரசாதியாக விளங்குபவர்
டிட்வாலா மகாகணபதி. நினைத்ததை நிறைவேற்றுபவர். மேலிரண்டு கைகளில் பாசமும், அங்குசமும், கீழ் வலக்கையில் ஜபமாலையும், இடக்கையில் மோதகமும் கொண்டு, ஸர்ப்பத்தை பூணூலாக அணிந்துள்ளார். கண்களிலும், நாபியிலும் வைரக் கற்கள் பளபளக்கின்றன. கணபதியே நேரில் பேசுவது போன்ற
உயிரோட்டத்துடன் காட்சி தருகிறார். நாகபந்தனத்தாலான பீடத்தில் அமர்ந்துள்ள இவ்
விநாயகரின் சிறப்பு, விரும்பியவரை மணக்க அருள் புரிவதே! ஆம்!
சகுந்தலையும், துஷ்யந்தனும் திருமணம் புரிந்து கொண்டது இந்த
விநாயகரின் சந்நிதியில்தானாம்.
பல்லாயிரம் ஆண்டுகட்கு முன் கண்வ முனிவரின்
ஆசிரமத்தில் சகுந்தலை, துஷ்யந்தனின் காந்தர்வ விவாகம் நடந்தது. பின்
துர்வாச முனிவரின் சாபத்தால் அரசன் சகுந்தலையை மறந்துவிட, சகுந்தலை நாளும் பொழுதும் இந்த டிட்வாலா மகா கணபதியையே வணங்கி வேண்ட, துஷ்யந்தனும் நினைவு திரும்பி, இவ்விடத்தில் சகுந்தலையை மணந்து கொண்டதாக புராண
வரலாறு. இதனால் இவ்வாலயத்தில் இளம் ஆண், பெண்களின் கூட்டம் எப்பொழுதும் அதிகமாகக்
காணப்படும். காதலர்களை இணைப்பதுடன், பிரிந்த தமபதியர் ஒற்றுமையாக சேர்ந்து வாழவும்
இத்தல கணபதி அருள் செய்வதாக நம்பிக்கை.
தற்போதைய ஆலயம் 1772ம் ஆண்டு மாதவராவ் பேஷ்வாவால் உருவாக்கப்பட்டது. திருமணம், பிள்ளைவரம், நல்ல வேலை, சிறப்பான கல்வி போன்றவையும் இம் மகா கணபதியை உள்ளம் உருகி வேண்ட, விரைவில் நிறைவேறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக