Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

வாசகி அனுபவம்


குமுதம் சிநேகிதி செப்டம்பர் 1 to 15, 2010 இதழில் வெளியானது




சுற்றுலாத்துறை செயலர் வெ. இறையன்பு அவர்களுக்கு,

    சமீபத்தில் சில வட மாநில நண்பர்களுடன் சென்னையச் சுற்றிப் பார்க்க வந்திருந்தோம். அவர்கள் மாமல்லபுரம் செல்ல ஆசைப்பட்டதால் தமிழ்நாடு டூரிஸம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனால் இயக்கப்படும் (Hop on, Hop Off) ஸ்பெஷல் பஸ்ஸில் டிக்கட் புக் செய்தோம். பஸ்ஸில் நாங்கள் ஆறு பேர் மட்டும்தான் இருந்தோம். வி.ஜி.பி., டிஸ்னி வர்ல்ட்(Disney World)  பார்க்க வேண்டும் என நாங்கள் சொன்னதற்கு பஸ்ஸிலிருந்த கைடு 'அதெல்லாம் சுற்றிப் பார்க்க ஒரு நாள் தேவை. நீங்கள் இந்த பஸ்ஸில் செல்வது சரிவராது' என்றார். எங்களுக்குத் தந்த லிஸ்டிலோ, வி.ஜி.பி, எம்.ஜி.எம், மருந்தீஸ்வரர், நித்யகல்யாண பெருமாள் கோயில் உள்பட மொத்தம் பத்து இடங்களுக்கு மேல் பார்க்கலாமென போட்டிருந்தது. கோயில்களுக்குச் சென்றால் முட்டுக்காடு, ஸீ லயன் ஷோ பார்ப்பது கஷ்டம் என்பதால் அவையும் கட்!

    நேராக 'தட்சிண் சித்ரா' சென்று அங்கிருந்து முதலைப் பண்ணை சென்று, அவசரமாக அடுத்த பஸ்ஸிற்கு வந்து காத்திருந்தால், அரை மணி ஆயிற்று, ஒரு மணி ஆயிற்று, ம்ஹூம். பஸ்ஸையே காணோம்! போன் செய்து விசாரித்தாலும் சரியான பதிலில்லை. ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் வந்த பஸ்ஸில் ஏறி 'ஸீ லயன் ஷோ' சென்றோம். பிறகு நேராக மகாபலிபுரம் சென்று மாலை 5 மணி பஸ்ஸில் முட்டுக்காடு சென்று விடலாமென்று கைடு சொல்ல, நாங்களும் அவசர அவசரமாக கடற்கரைகோயில், பாண்டவர் ரதம் பார்த்து, அரக்க பரக்க பஸ் நிலையம் வந்தால், பஸ் நான்கே முக்கால் மணிக்கே சென்றுவிட்டதாம். அடுத்து 6 மணி பஸ்ஸில் வரும்போது முட்டுக்காடு படகு சவாரிக்கான நேரம் முடிந்துவிட்டது. கடைசியில் நாங்கள் பார்த்தது நான்கு இடங்கள் மட்டுமே. அதுவும் அரைகுறையாக! சிங்கப்பூரில் ஒருவரோ, இருவரோ மட்டுமே இருந்தால் கூட அங்கு பஸ்களை கேன்சல் செய்வதில்லை! அதேபோல் நம் நாட்டிலும் எதிர்பார்த்தது எங்கள் தவறு!

    இதைவிட இன்னொரு கொடுமை. மதியம் சாப்பிட மகாபலிபுரத்தில் உள்ள 'ஹோட்டல் தமிழ்நாடு'க்கு அழைத்துச் சென்றபோது ஏற்படடதுதான்! பல வெளி நாட்டவரும், வட நாட்டினரும் வரக்கூடிய அந்த ஹோட்டலில் பெண்களுக்கான கழிவறை, பஸ் நிலையங்களிலிருக்கும் கட்டணமில்லாத கழிவறை போல் மோசமாகக் காணப்பட்டது. சாப்பிடும் முன்பும், பின்பும் அந்தக் கழிவறைக்குச் சென்ற அத்தனை பெண்களும் வாந்தி எடுக்காத குறையாக வெளியே வந்தோம்! அதிலும் அங்கிருந்த சில வெளி நாட்டு பெண்களைப் பார்த்தபோது, நம் நாட்டு நிலைமை கூச வைத்தது. பெரும்பாலன வெளிநாட்டினர் வரும் இது போன்ற இடங்களை சுற்றுலாத்துறை கண்ணும் கருத்துமாக கவனித்து சரி செய்ய வேண்டாமா?


    அங்கு சாப்பாடு ரூ.75. கிட்டத்தட்ட நூறு பேர் அங்கிருந்தோம். சாதம், சப்பாத்தி, சப்ஜி எதுவுமில்லை. சாப்பிட ஸ்பூன்கள் இல்லை. டிஷ்யூ பேப்பர் இல்லை. வெளிநாட்டினர் பலரும் கையால் சாப்பிடத் தெரியாமல் திண்டாடினார்கள். பசியில் ஒவ்வொன்றுக்கும் காத்திருந்து காத்திருந்து சாப்பிடுவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ஹோட்டலுக்கு இத்தனை பேர் தினசரி சாப்பிட வருவார்கள் என்று தெரிந்து அதற்கேற்ப ஏற்பாடு செய்ய வேண்டாமா? மக்களுக்கு எத்தனையோ வசதிகளைச் செய்து தருவதாக விளம்பரப் படுத்திக் கொள்ளும் சுற்றுலாத்துறை, அவையெல்லாம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க வேண்டாமா?



ஃபாலோ அப்



குமுதம் சிநேகிதி-களுக்கு
விளக்கமளிக்கிறார் சுற்றுலாத் துறை நிர்வாக இயக்குனர்!

குமுதம் சிநேகிதி செப்டம்பர் 16-30, 2010 இதழில் வெளியானது.

சென்ற இதழ் குமுதம் சிநேகிதியில் சுற்றுலாத் துறை செயலருக்கு (வெ இறையன்புக்கு ஒரு கடிதம்) ராதா பாலு என்ற வாசகி எழுதியுள்ள கடிதத்திற்கு ஒரு சில விளக்கங்களைக் கொடுக்க விரும்புகிறோம்.

வாசகி ராதாபாலு தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நட்த்தும் எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் (Hop on Hop off) என்ற சுற்றுலா பயணத் திட்ட்த்தில் பயணம் மேற்கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். பயணத்தில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை வாசகி எழுதியிருந்தார். ஆனால் அதை வெளிப்படுத்திய விதத்தில் தெரிகிற காழ்ப்புணர்ச்சி உண்மைத் தன்மையை சற்று நீர்த்துப் போகச் செய்கிறது.

சுற்றுலாத் துறை நியமிக்கும் வழிகாட்டிகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சி கொடுக்கப்பட்ட பிறகே, இந்த சுற்றுலா பயணத்தில் வழிகாட்டிகளாக நாங்கள் அனுப்பி வைக்கிறோம். ‘எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்’ திட்டத்தில் காண்பிக்கக் கூடிய இடங்களில் சொகுசுப் பேருந்தை நிறுத்தி விட்டு யார் பார்க்க விரும்புகிறார்களோ அவர்களை மட்டும் சென்று வருமாறு கேட்டுக் கொள்கிறோம். நடத்தப்படும் சுற்றுலாவையும் (conducted Tours) ‘எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்’ என்ற சுற்றுலாவையும் புரிந்து கொள்ளாமல் வாசகி கடிதத்தை எழுதியுள்ளார். எல்லா இடங்களிலும் இறங்கி நேரத்தை விரயமாக்காமல் பயணிகள் தாங்கள் விருப்பப்படும் இடத்தில் இறங்கி எவ்வளவு நேரமானாலும் சுற்றிப் பார்த்துவிட்டு அடுத்து வரும் பேருந்தில் ஏறலாம். அனைத்து இடங்களிலும் இறங்குவது என்பது இந்த சுற்றுலாவில் சாத்தியமில்லை. விருப்பப்படும் இடங்களில் இறங்குவதுதான் இந்தச் சுற்றுலாவின் சிறப்பு அம்சமே.

இந்த சுற்றுலா பயணத்தின்படி ஒவ்வொரு 45 நிமிடத்திற்குப் பிறகு வாகனத்தை சுற்றுலா இடங்களுக்குக் கொண்டு சென்று, பயணிகளை அழைத்துக் கொண்டு அடுத்த இடத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளோம்.

வெளி நாடுகளில் இயங்கி வந்த இந்த வசதியை தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தமிழ் நாட்டிலும் அறிமுகப்படுத்தி உள்ளது. இது பயணிகளுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பு என்பதை உணர்த்தவே சுற்றுலாத் துறை இதை விளம்பரப்படுத்தி வருகிறது. சமீபத்தில் தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செய்திருக்கும் புதிய முயற்சிகளுக்காக 8 தேசிய விருதுகளும், ஒரு சர்வதேச விருதும் பெற்றிருக்கிறோம்.

இறுதியாக இன்னொரு விஷயம். மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டல் தமிழ் நாடு உணவகத்தில் தங்கிவிட்டு, உணவு உண்ட பல வெளி நாட்டுப் பயணிகளும் கூட, எங்களை பாராட்டி விட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். சாதம், சப்பாத்தி, சப்ஜி எதுவும் இல்லாமல் எந்த ஒரு விடுதியும் நடத்த இயலாது. சப்பாத்தி, சப்ஜி இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால் சாதம் இல்லாமல் பொதுவாக எந்த உணவும் பரிமாற முடியாது.

வாசகியின் கடிதத்துக்கு விளக்கங்களை அளித்ததன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு பல நல்ல திட்டங்களை அளிக்க முடியும் என நம்புகிறோம்.

டாக்டர் ஏ.சி.மோகந்தாஸ்
நிர்வாக இயக்குனர்
தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
சென்னை-2




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக